கல்கண்டு சாதம் புரட்டாசி மாதம்

 

                                                              கல்கண்டு சாதம்



கல்கண்டு சாதம் சாப்பிட்டு இருக்கீங்களா மக்களே... சாப்பிட்டது இல்லைன்னா இது உங்களுக்கான பதிவுதான்....


அதுக்கு முன்னாடி தளியல் - ன்னா எத்தனை பேருக்கு தெரியும். 'தளிகை' அப்படிங்கற சொல்தான் காலபோக்குல தளியல்னு மாறிடுச்சு. எனக்கு 'தளிகை' ன்னாலே என்னன்னு தெரியாது. இதுல தளியல் வேறயான்னு நீங்க புலம்பறது காதில விழுது. சொல்றேன்...


புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்து சனிக்கிழமை பெருமாளுக்கு படைக்கறதுதான் இந்த தளியல்.


சரி முதல்ல சொன்ன கல்கண்டு சாதத்துக்கும், இந்த தளியளுக்கும் என்ன சம்பந்தம்தான கேட்கறீங்க... இந்த தளியல் போடும்போது அதுல பல வகையான உணவு சமைச்சு வச்சு பெருமாளுக்கு படையல் போடுவாங்க. அதுல ரொம்ப முக்கியமான ஒரு உணவுதான் இந்த 'கல்கண்டு சாதம்'. இது எப்படி செய்யறதுன்னுதான் நாம இப்ப பார்க்க போறோம்.


தேவையான பொருட்கள் :


பச்சரிசி  : 1 கப்

பால் :  1 லிட்டர்

கல்கண்டு : 2 கப்

நெய் : 1/2 கப்

முந்திரி திராட்சை தலா : 15

எலத்தூள் : 1/2 டீஸ்பூன்

குங்குமப்பூ : 1 சிட்டிகை ( ஒரு கரண்டி பாலில் ஊற வைக்கவும் )


செய்முறை


அரிசியுடன் பால் , 2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் குழைய வேகவிடவும்.வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து கல்கண்டை பொடித்து சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.


கல்கண்டு கரைந்து , சாதத்தோடு‌ நன்றாக கலந்ததும் இறக்கவும்.


நெய்யில் பாதியளவைக் காயவைத்து முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும்.


இவற்றுடன் மீதமுள்ள நெய், ஏலப்பொடி, பாலில் கரைத்த குங்குமப்பூ ‌அனைத்தையும் கல்கண்டு சாதக் கவலையோடு சேர்ந்த கிளறி இறக்கவும்.


அவ்வளவுதான் மக்களே பெருமாளுக்கு பிடித்த கல்கண்டு சாதம் தயார்

Comments